அரசு அலுவலக வளாகங்களில் இருக்கும் துருப்பிடித்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு...!

அரசு அலுவலக வளாகங்களில் இருக்கும் துருப்பிடித்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு...!

தமிழக அரசு அலுவலக வளாகங்களில் இருக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.


இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபற்றி விசாரித்தால், அவை அங்கு ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? என்பது பற்றி யாராலும் கூற முடியவில்லை. எனவே இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்தவும், அதற்கான வழிகாணவும் நீங்கள் முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும்.

அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும்.

அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வரமாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகிவிடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்புவின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்கத்தக்கதாகும். அரசு அலுவலக வளாகத்திற்குள் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த வாகனங்களுக்கு லங்கும் இல்லை காமும் இல்லை இந்த வாகனங்களின் ஆயுட்காலம் முடிந்து போய் உள்ளது ஆனால் இது சம்பந்தமான வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளது.

வருடக் கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா என்று இதை அடிக்கடி பார்க்கும் எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. அதற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு நல்ல முடிவை கண்டிருக்கிறார் அவருக்கு மக்களாட்சியின் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த வாகனங்களை வளாகத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் அலுவலகம் தூய்மை படுவதோடு மட்டுமில்லாமல் அங்கு தங்கியிருக்கும் ஜீவராசிகள் ஆல் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளும் தவிர்க்கப்படுவதோடு துருப்பிடித்து தேங்கிக் கிடக்கும் இந்த வாகனங்கள் மறு சுழற்சியின் மூலம் புத்துயிர் பெறும் என்பது திண்ணம்