பத்தாம் வகுப்பு அரியர்ஸ் மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியற்றுவாரா முதலமைச்சர் மு க ஸ்டாலின்
பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைகின்ற மாணவர்கள் தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களில் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு அக்டோபர் நவம்பர் மற்றும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடத்துவது வழக்கம்.
இப்படி தேர்வு எழுதி வெற்றி பெறுகின்ற மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் மேல்நிலை மற்றும் உயர் கல்வியில் சேர்ந்து படித்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வந்தனர்.
இந்த முறையால் இவர்களின் வாழ்க்கையில் ஒரு வருடம் வீணானது. இதை தவிர்ப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜூன் மாதத்தில் இவர்களுக்கு மறுதேர்வு நடத்தி ஒரு கல்வியாண்டு வீணாகாமல் தடுத்து வந்தது.
இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாங்கள் தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக படித்து தேர்வு எழுதி அந்த கல்வி ஆண்டிலேயே தங்கள் படிப்பை தொடர்ந்தனர் இதனால் அக்டோபர் நவம்பர் மற்றும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வந்த அரியர்ஸ் தேர்வுகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 2019 கோவிட் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 விற்கு பொதுத்தேர்வுகள் நடத்தாததால் மறுத்தேர்வு மற்றும் அரியர்ஸ் தேர்வுகள் நடத்த படாமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் எந்த தேர்வும் எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டு உள்ளனர். இருந்தாலும் அவர்கள் மேல் வகுப்பிற்கு செல்வதற்கு ஒன்பதாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை பயன்படுத்தி சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் இவர்கள் பாலிடெக்னிக் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் சேர்ந்து வருகின்றனர் ஆனால் இந்த வாய்ப்பு அரியர்ஸ் மாணவர்களுக்கு கிடைக்காததால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் படிப்பைப் பாதியிலேயே துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரியர்ஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு இருந்தால் அவர்கள் தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை எழுதி வெற்றி பெற்று மேல் வகுப்பிற்கு சென்று இருப்பார்கள் அது நடத்தப்படாததால் படிப்பை பாதிலேயே தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள்.
அட்லீஸ்ட் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு போல் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்தால் கூட பாலிடெக்னிக் மேல்நிலை வகுப்புகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கடந்த ஆண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கூட பெரும்பான்மையான இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன ஆனால் பல பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகவே இருக்கின்றன அதற்கு காரணம் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்ததே.
இந்த ஆண்டும் இதே நிலை தொடராமல் இருக்க வேண்டும் என்றால் இந்த அரியர்ஸ் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் ஆன மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை போல் ஒன்பதாம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் மற்றும் மேல்நிலை கல்வியில் சேர்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது இந்த மாணவர்களின் பரிதாபமான வேண்டுகோள்.
