ரூ.6 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி; 85 உடல்களை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.,வினர்
கொரோனா வார்டில் நேரில் ஆறுதல் கூறிய த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகான்
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா என்ற கொடிய நோய் தொற்றால் மக்கள் சொல்ல முடியாத பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிஉள்ளனர். இதையறிந்த த.மு.மு.க.,வினர் தமிழகத்தில் தங்களது சேவைப்பணியை விடாது செய்து வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை உறவினர்கள் கூட வந்து அடக்கம் செய்ய முடியாதநிலை இருந்த சூழலில் த.மு.மு.க.,வினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் இறந்த 85 பேரின் உடல்களை அவரவர்கள் சமுதாயப்படி நல்லடக்கம் செய்தது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதித்தவர்களை அருகில் சென்று பார்க்கவே அச்சப்பட்டநிலையில் த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லகான் த.மு.மு.க.,வின் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகளுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நோயாளிகளின் நலன் விசாரித்து தேவையான உதவிகளை வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டது. இதுஒருபுறம் இருக்க கொரோனாவல் ஊரடங்கு ஏற்பட்டு அன்றாடம் பிழைப்பிற்கே வழியின்றி தவித்த ஏழை எளிய மக்களை த.மு.மு.க.,வினர் அறிந்து அவர்களது இல்லங்களுக்கே தேடி சென்று ஏழை குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகை, எண்ணெய், மருந்துகள் என ரூபாய் 6 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகளை சுமார் 500 குடும்பத்தினர்களுக்கு வழங்கினர். இத்துடன் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் கொரோனா தடுப்பு பணிக்குழு உதவியாளர்கள் என த.மு.மு.க.,வின் மருத்துவ அணியினர் செயல்பட்டு 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
த.மு.மு.க.,வினர் மருத்துவமனைகளில் அனைவருக்கும் காலையில் கபசரகுடிநீர், மாலையில் ஆட்டுக்கால் சூப் வழங்கி வருகின்றனர். உணவு தேவைப்படுவோர்களை தேடிகண்டுபிடித்து அவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் தினமும் உணவு வழங்கும் பணியையும் த.மு.மு.க.,வினர் செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் இதுவரை 60 பேருக்கு த.மு.மு.க.,வினர் ரத்ததானம் வழங்கி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகான் வழிகாட்டுதலில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யாசர் அராபத், த.மு.மு.க., நகர் தலைவர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் சுலைமான், மமக நகர் செயலாளர் முகம்மது அமீன், த.மு.மு.க., பொருளாளர் முகம்மது தமீம், தமுமுக சேர்ந்த மன்சூர், நபீஸ், அஜீஸ், சதாம், புவனேஸ்வரன் உள்ளிட்டோர் தொடர்ந்து இச்சேவைகளை செய்து வருகின்றனர். இதுபோன்று மாவட்டத்தில் உள்ள த.மு.மு.க.,வின் நிர்வாகிகள் அவரவர்கள் பகுதியில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. த.மு.மு.க.,வின் இப்பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார துறையினர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒலிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

