12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு திட்டம் என தகவல்*

 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு திட்டம் என தகவல்*


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

.ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12-ம் வகுப்பு தேர்வு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி நேற்று 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். 

இருப்பினும், மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் சற்று குழப்பம் இருக்கவே செய்கிறது.12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் நம்மிடம் இருந்தாலும், மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர முடிவு செய்யும்போது அவர்களுக்கு தேர்வு முடிவுகள் அவசியமாகிறது. அதனால், முழுவதுமாக ஆலோசித்து முடிவு செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

. 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசித்து இரண்டு நாள்களில் பதிலளிகவேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.இந்த இரண்டு நாள்களுக்குள் மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்துப் பரிசீலனை நடைபெறும்.

. பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக்களை பெற்று அதன்அடிபடையில், தேர்வு நடத்தப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெற்றோர் மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மாணவர்கள், உயர்கல்விக்கு செல்கின்ற போது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொற்று குறைந்த பிறகு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

.இந்நிலையில் மத்திய அரசு 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சிஇ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததன் பின்னணி காரணங்களும் முன்வைக்கப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் தற்போது மத்திய அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததற்கு காரணம் புதிய கல்விக் கொள்கையை இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதற்காகவே என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

.மாணவர்களின் உயிரைப் பற்றி அக்கறை கொள்ளும் மத்திய அரசு லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட்,ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்கிற கேள்வியையும் முன்வைக்கின்றனர். 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால், மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும்போது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழக அரசு தேர்வு நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-

நாளை மறுதினம் இது தொடர்பான முக்கிய முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.