தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்...
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு இலவச பாடநூல்கள் வழங்குவது போல் அனைத்து வகை தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசு இலவசமாக பாடல்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்
தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ப்பதில் மிக சிறப்பாக பணியாற்றி மக்களின் முதல்வராய் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் நாளும் வலம் வருவதை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நன்றியோடு பாராட்டுகின்றோம்.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச பாடப்புத்தகம் உட்பட 18 வகையான பொருட்களுடன், சத்துணவு, சைக்கிள், இலவச லேப்டாப், கல்வி கற்பதில் வேலைவாய்ப்பில் மருத்துவ சேர்க்கையில் என எல்லாவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குமிக முக்கியத்துவம் தந்து பள்ளிக் கல்வியையும்
உயர் கல்வியையும் மேம்படுத்துவதில் தமிழக அரசு முன்னிலை வகிப்பதை பாராட்டுகின்றோம்.
அதேபோல் தமிழகமெங்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய நடுத்தர தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தரமான கல்வியை பெறவேண்டும் என்பதற்காக படித்து வருகிறார்கள்.
அந்த மாணவர்கள் அனைவருக்கும் இந்த கொடிய குரோன நோய் தொற்று காலத்திலாவது குறைந்தபட்சம் இலவச பாடப் புத்தகங்களை மட்டுமாவது தந்தால் அவர்களின் பெரும்மனச்சுமை பணச்சுமை குறைய ஏதுவாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படிக்க முடியாமல் புதிய புத்தகங்களை வாங்க முடியாமல் வாழ்விழந்த பெற்றோர்கள் உடனடியாக பணம் கொடுத்து புத்தகம் வாங்க முடியாத நிலையில் தத்தளித்து வருவதால் அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமாவது இலவச பாடப் புத்தகங்களை வழங்கி உதவிட வேண்டும் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...
அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வாங்க முடியாததால்
மக்களின் கஷ்டங்களை உணர்ந்து கல்வி கட்டணத்தை உயர்த்தவில்லை..
இந்த இக்கட்டான சூழலில் தமிழ்நாடு முழுக்க எந்தத் தனியார் பள்ளியிலும் கல்வி கட்டணத்தை உயர்த்த மாட்டோம், நன்கொடை சேர்க்கை கட்டணம்சிறப்பு கட்டணம் என்று எந்தக் கட்டணமும் இந்த ஆண்டு வாங்க மாட்டோம் என்ற உறுதி மொழியோடு பெற்றோர்கள் மாணவர்கள்
கல்விக் கட்டணத்தை உயர்த்தாமல்.... இருப்பதை கொடுங்கள் இருக்கும்போது கொடுங்கள் என்கிற தாரக மந்திரத்தோடு அனைவரும் பயன்பெறும் வண்ணம் இந்தப் பொது அறிவிப்பை எங்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து பள்ளி நிர்வாகிகள் ஒப்புதலோடு வெளியிட்டு இருக்கிறோம்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் அருள்கூர்ந்து தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களும்
பயன் பெறத்தக்க வகையில் அனைவருக்கும் இலவச பாடப்புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்
நன்றியுடன்.
கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.
