ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வில் ஆளுங்கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை...!

 ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வில் ஆளுங்கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை...!


தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டது− கட்சி கொடி சின்னத்துடன் பேனர் வைத்தது− சமூக இடைவெளி இன்றி கொரானா விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த தேவராஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு கடந்த வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அன்று ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் அரசிடம் பதிலை கேட்டு தெரிவிப்பதாக கூறியதை அடுத்து இந்த வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு  நீதிபதிகள் சஞ்ஜிப் பேனர்ஜி −செந்தில் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையிலான முதலாவது அமர்வுக்கு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

 அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ,

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நியாயவிலை கடைகளில் முகக்கவசம் அணியாமலும்−சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாமலும் நிவாரணம் வழங்கியது தவறானது. மேலும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கிய உத்தரவில் கொரோனா நிவாரணம் வழங்கும்போது ஆளுங்கட்சியினர் கலந்துகொள்வதோ− நிகழ்வில் கட்சியின் கொடி சின்னத்தை எந்தவகையிலும் பயன்படுத்துவதோ கூடாது என தெளிவாக உத்தரவிட்டு உள்ளது.  தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கும் நிகழ்வில் ஆளும்கட்சியினர்  கலந்து கொண்டதோடு கொடி சின்னம் அச்சிட்ட பேனர்களை வைத்தது தவறானது என்று வாதிட்டார். 

இதற்கு ஆதாரமாக ராதாபுரம் தொகுதியில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படங்களை மேற்கோள்காட்டி பேசிய மனுதாரரின்  வழக்கறிஞர், அப்பாவுவை வரவேற்று  ரேஷன் கடை முகப்பில் வைக்கப்பட்ட பேனர்களில் திமுக கொடி சின்னம் பொறிக்கப்பட்டிருந்த புகைப்படங்களை நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார். 

சென்னை அண்ணா நகர் தொகுதியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் திமுக சின்னம் வரையப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் வரும் ஜுன் மூன்றாம் தேதி அரிசி முதலான நிவாரணப் பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படும்போது ரேஷன்கடைகளில் ஆளும்கட்சியினர் இது போன்று கலந்துகொள்வதை தடை செய்ய வேண்டும் என்று வாதாடினார். 

 தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது முற்றிலும் மாறுபட்டது. அது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் டோக்கனில் கட்சி சின்னத்தையோ கொடியையோ அச்சிடக்கூடாது என்றுதான் இருக்கிறது. மேலும் தற்போது தமிழகத்தில் 90% குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

 இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆளும்கட்சியின் கொடியும் சின்னமும் அரசு நிகழ்ச்சிகளில் இடம் பெறக்கூடாது என்பது தான் இந்த வழக்கின் சாராம்சம். தற்போது மனுதாரர் தரப்பில் ராதாபுரம் தொகுதி மற்றும் சென்னை அண்ணா நகர் தொகுதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப் படங்களைப் பார்க்கும் போது தவறு நடந்திருப்பது தெளிவாக புலனாகிறது.எனவே இதனை சுலபமாக புறந்தள்ளி விட முடியாது.

. நிவாரணம் வழங்குவது அரசு நிகழ்ச்சிதானே ஒழிய கட்சி நிகழ்ச்சி அல்ல! இனி வரும் காலங்களில் அவ்வாறு ஆளுங்கட்சினர் கலந்துகொள்வது, ஆளுங்கட்சியின் சின்னங்களையும் கொடிகளையும் பேனராக வைப்பது போன்ற நடவடிக்கைகளை இந்த நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

அரசு என்பது தனி. அரசியல் என்பது தனி என்பதை ஆளும்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்  கருத்து தெரிவித்த நீதிபதிகள்,

 இறுதியாக பிறப்பித்த உத்தரவில்

"மனுதாரர் தரப்பில் ராதாபுரம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப் படங்களை பார்க்கும்போது  கொரோனா விதிமுறைகள் முழுமையாகக் கடைப் பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. புகைப்படங்களில் தம்மை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆளுங்கட்சியினர் பலர் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

. மேலும் ஆளும் கட்சியினர் சின்னம் கொடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது கண்டனத்துக்குரியது. இதனை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வரும் காலங்களில் இது போன்ற நிவாரணம் வழங்குவது போன்ற அரசு நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் ஆளுங்கட்சியினர் கலந்து கொள்வதை இந்த நீதிமன்றம் தடை செய்கிறது என்று கூறி உத்தரவிட்டனர்.