அண்ணனை சந்திக்கப்போகும் தம்பி ....!அரசியலில் அடுத்த ஆட்டம் என்ன....?
அழகிரி மீதான அதிருப்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு விலகி இருப்பதையடுத்து, இவர்களின் சந்திப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது நாளையே கூட நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் தற்போது உருவடெுத்துள்ளது.
ஸ்டாலின் பதவியேற்புக்கு முன்பேயே, முக அழகிரி பாசத்துடன் தம்பிக்கு வாழ்த்து என்று சொல்லி இருந்தார்.. இதையடுத்து, பதவியேற்றதும், மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி வாய்மொழி உத்தரவினை முக ஸ்டாலின் பிறப்பித்ததாகவும் சொல்லப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரைக்கு ஸ்டாலின் சென்றிருந்தபோது, எப்படியும் அழகிரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் பரபரத்தன.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.
ஸ்டாலின் வீடு தேடி வந்து பார்க்கட்டும் என்று அழகிரி நினைத்துவிட்டாராம்.. அண்ணனே வந்து தம்மை நேரில் வந்து சந்தித்து பேசட்டும் என்று ஸ்டாலின் நினைத்து விட்டாராம்.. இதனாலேயே இந்த சந்திப்பு நிகழவில்லை என்று சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, அரசு விவகாரமாக மதுரை வந்திருப்பதால், தனிப்பட்ட விஷயங்களுக்காக அந்த பயணத்தை மாற்ற, ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், ஜுன் 3-ம்தேதி, கருணாநிதி பிறந்த நாள் அன்று இருவரும் எப்படியும் சந்தித்து விடுவார்கள், அன்றைய தினம் குடும்பத்தினருடன் இணைந்து கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்றும் அதற்கு பிறகு அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி ஏதாவது தரப்படும் என்றும் தகவல்கள் வந்தன. அந்த தகவல் உறுதியா, புரளியா என்று தெரியும் முன்பேயே மற்றொரு தகவல் பரபரத்து வருகிறது.
இந்த நிலையில், அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது... நாளை தினம் அதாவது 28-ம்தேதி குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துகிறார்கள்.. தற்போது கொரோனா காரணமாக விழாவுக்கு குறிபிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... இந்த விழாவிற்காக சென்னை செல்லும் அழகிரி ஈஞ்சம்பாக்கம் பங்களாவில் தங்குகிறார்.
இந்த விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு கேள்வி எழுந்துள்ளது. அப்படி பங்கேற்றால் ஸ்டாலின் ,அழகிரி சந்திப்பு கண்டிப்பாக நடக்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன... ஒருவேளை இந்த சந்திப்பு நிகழாவிட்டால், கருணாநிதி பிறந்தநாளனறு சந்திக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், அதற்கு முன்னதாகவே அழகிரி கோட்டைக்கோ, அல்லது வீட்டிற்கோ சென்று ஸ்டாலினை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
இவர்களை இணைக்கும் விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வருவது கருணாநிதியின் மகள் செல்விதானாம்.. இப்போதும் அதே வேகத்துடன் இருப்பதால் விரைவில் சந்திப்பு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம், இவர்களின் சந்திப்பு நடந்தால் அது நிச்சயம் பாஜகவுக்குதான் சிக்கலை ஏற்படுத்தும்.. அழகிரிக்கு ஸ்டாலின் மீது ஏற்கனவே இருக்கும் அதிருப்தியை வைத்து, பாஜக நிறைய கணக்குகளை போட்டிருந்தது.. தனிப்பட்ட முறையில் அழகிரி மீது பாஜகவுக்கு மரியாதை இருந்தாலும், தாமரையை மலரவைக்க, அழகிரியை பயன்படுத்த நினைத்ததையும் மறுக்க முடியாது..
குறைந்த பட்சம் தேர்தல் சமயத்திலாவது, திமுகவுக்கு எதிராக இல்லாவிட்டாலும், ஸ்டாலினுக்கு எதிராகவாவது பிரச்சாரத்தை கையில் எடுப்பார் என்று முணுமுணுக்கப்பட்டது.. அதுவும் தவிடுபொடியாகிவிட்டது.. தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் திமுகவில் தனக்கு நெருக்கமான மற்றும் சீனியர்களை தன்பக்கம் இழுப்பார் என்று பேசப்பட்டது.. அதுவும் சுக்குநூறாகிவிட்டது. கருணாநிதியின் மகன் திமுகவுக்கு ஒருபோதும் துரோகம் செய்யக்கூடியவர் அல்ல என்பதை கடைசி வரை நிரூபித்து காட்டி விட்டார் அழகிரி.
இப்போது இல்லை என்றாலும், கொஞ்ச நாள் கழித்து, பாஜக நிச்சயம் திமுகவுக்கு ஏதாவது ஒரு ரூட்டில் குடைச்சலை கொடுக்க முனையலாம்.. இன்னொரு பக்கம், சசிகலாவை சேர்த்துக் கொண்டு அதிமுகவும் தன் பங்குக்கு குடைச்சல் தரலாம்.. இவைகளை எல்லாம் சமாளிக்க அழகிரி என்ற அனுபவ குதிரையும் தன்னுடன் இருந்தால்தான் எளிதாக சமாளிக்க முடியும் என்று திமுக தலைமையும் கணக்கு போடுவதால்தான், தென்மண்டல பொறுப்பை அழகிரிக்கு ஒதுக்க முடிவெடுத்து வருகிறதாம்..!
இந்நிலையில் அழகிரியின் வருகை உதயநிதியின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.





