சினிமா பாடகி சின்மயி அம்பலப்படுத்திய மகரிஷி, செட்டிநாடு, சாந்தோம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எப்போது?
பத்ம சேஷாத்ரி பள்ளியில் பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் ராஜகோபால் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது போல, பாடகி சின்மயி அம்பலப்படுத்திய மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா, சாந்தோம் உயர்நிலை பள்ளி உள்ளிட்டவற்றில் பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோன்று இவர் கடந்த காலங்களில் மீ டூ வில் கவிப்பேரரசு வைரமுத்து மீது இதே போன்று ஒரு புகாரை முன்வைத்தார். அதன் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலை மறை காய் மறைவாக இருந்து வந்த பாலியல் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. அரசு அலுவலகங்கள், சினிமா துறை, ஐடி துறை, தனியார் அலுவலகங்கள், விளையாட்டு, ஊடகத் துறை என பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன.
தற்போது பள்ளி, கல்லூரிகளிலும் இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் தற்போது பத்ம சேஷாத்ரி மூலம் வெளி வருகிறது. சென்னை கே கே நகரில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறை துணை ஆணையரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், பத்மசேஷாத்ரி பள்ளி போலவே, மகரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பாடகி சின்மயி மாணவிகளின் புகாருடன் அம்பலப்படுத்தியுள்ளார். அது போல் தடகள பயிற்சியாளர் நாகராஜன் படுக்கை அறைக்கே மாணவிகளை அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டார்.
அதுபோல் துணை ஆணையரின் செல்போன் எண்ணிற்கு 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்வி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பள்ளிகள், கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தி புகார்களில் உண்மைத்தன்மை இருப்பின் அவர்கள் மீதும் அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசிரியர் என்பவர் பெற்றோர் ஸ்தானம் என்பது மாறி தகப்பன் என்ற போர்வையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது போல் இந்த ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை கொடுப்பதால் அவர்கள் மீது வந்த பாலியல் புகார்களை கண்டும் காணாமல் இருந்த பள்ளி நிர்வாகம், முதல்வர் உள்ளிட்டோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இனி தவறு செய்ய தோன்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகார்கள் மீது போலீஸார் தாமாக முன் வந்து, அதாவது மாணவிகள் முறையாக புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி உண்மையும் ஆதாரமும் இருப்பின் எந்தப் பள்ளி, எந்த பின்புலம் என்று பார்க்காமல், பாரபட்சமே இல்லாமல் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து பெற்றோரின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும்.


