தமிழகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறப்பு!? புத்தகம் அச்சடிப்பு பணிகள் நிறைவு!
தமிழகத்தில் வர இருக்கும் புதிய கல்வி ஆண்டான 2021- 2022கான 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடபுத்தகங்ககள் அச்சடிக்கும் பணி முடிந்து விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி டிவி வழியாகவும், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும் பாடங்களை நடத்தியது. கடந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்ததால், மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், ஜூன் மாதத்தில் தொற்று பாதிப்புகள் குறைந்து விட்டால் வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான இலவச புத்தகங்களை வழங்குவதற்கு ஏதுவாக பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறந்த உடனேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு 6 கோடி புத்தகங்கள் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
தனியார் பள்ளிகளைப் பொருத்த வரையில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்களை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாததால் பெரும்பான்மையான பள்ளிகள் புத்தகங்களை வாங்கவில்லை.
அந்த புத்தகங்கள் அனைத்தும் அரசு குடோன்களில் அப்படியே இருக்கிறது எனவே தான் அவர்களுக்கான புதிய பாட நூல்கள் அச்சிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
