திமுகவிற்கு தாவும் முன்னாள் அதிமுக அமைச்சர்; முழு பின்னணி.....!?
திமுகவில் சேர போகிறீர்களா" என்று நிலோபர் கபிலை செய்தியாளர்கள் கேட்டால், அதற்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் மறுக்கவில்லை.. விரைவில் தெரியப்படுத்துவேன் என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.. இந்த சஸ்பென்ஸ்தான் தமிழக அரசியலில் சலசலப்பை கிளப்பி விட்டு வருகிறது
கடந்த ஒரு வருடமாகவே, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு அதிமுகவில் பிரச்சனை இருந்து வருகிறது.. கேசி வீரமணி இவரை தொடர்ந்து அவமானப்படுத்துவதாகவும், தேவையில்லாமல் தன்னை பற்றி விமர்சித்து கட்சிக்குள் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாகவும் பலமுறை செய்தியாளர்களிடம் கண்ணீர் விட்டு சொல்லி இருந்தார் நிலோபர் கபில்.
மேலும் துரைமுருகனும், வீரமணியும் மாமன், மச்சான் என்று கூப்பிட்டுக் கொள்கிறார்கள், திமுகவை பெற்றி பெற வைக்க வீரமணியே உதவுகிறார், எனினும் அதிமுக தலைமையை தான் முழுமையாக நம்புவதாகவும், இதற்கெல்லாம் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், மோசடி புகார் காரணமாக கட்சியிலிருந்து நிலோபர் நீக்கப்பட்டுள்ளார்.. அதிமுக தலைமையே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதற்குதான் நிலோபர் கொந்தளித்துள்ளார்.. என்னை நீக்கியதற்கு பண மோசடிப் புகார்தான் காரணம் என்றால், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடி புகார்கள் இருக்கின்றன... அவ்வளவு ஏன், எடப்பாடி பழனிசாமி மீதும்கூட ஊழல் புகாரை தளபதி (முதல்வர் ஸ்டாலின்) தந்திருக்கிறார் என்று கொளுத்தி போட்டார்.
முதல்வர் என்று சொல்லாமல் தளபதி என்று நிலோபர் சொன்ன உடனேயே, "நீங்கள் திமுகவில் சேரப்போகிறீர்களா" என்று கேட்டனர்.. அதற்கு அவர், திமுகவில் சேரப்போகிறேனா, இல்லையா என்பதை விரைவில் தெரியப்படுத்துவேன்... ஆனால், எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்... எந்த கட்சியில் என் உழைப்பை ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்தக் கட்சியை ஆதரிப்பேன் என்றார்.
ஆக மொத்தம், திமுகவுக்கு போகவே இல்லை என்று கட் & ரைட்டாக நிலோபர் சொல்லவே இல்லை.. அதேசமயம், 6 கோடி ஊழல் புகார் என்பதைவிட, திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் நிலோபரை சந்தித்து பேசியதுதான் அதிமுக மேலிடத்தின் கோபத்துக்கு காரணம் என்கிறார்கள்.
. நிலோபரின் அம்மா இறந்துவிடவும், அதற்காக துக்கம் விசாரிக்கவே நேரில் வந்து பேசிவிட்டு சென்றார் தேவராஜ் என்று இந்த சந்திப்புக்கு காரணம் சொல்லப்பட்டாலும், விஷயம் வேறு என்கிறார்கள்.
இத்தனை நாட்களும் புகைச்சல் நிலோபருக்கு கட்சியில் இருந்து கொண்டே இருந்தது.. எடப்பாடி பழனிசாமியும் இது சம்பந்தமாக அழைத்து பேசாமலேயே இருந்துள்ளார்.. இந்த முறை சீட்டும் தரப்படவில்லை.. இந்த அதிருப்தியில் நிலோபர் இருந்த நிலையில்தான், திமுக இப்படி ஒரு ஸ்கெட்ச் போட்டு நிலோபரை உள்ளே அழைத்திருக்க முயன்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதற்கேற்றபடி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் பரபரத்து வருகின்றன.. எப்படியும் இன்று இது சம்பந்தமான அறிவிப்புகள் வரும் என்றும் சொல்லப்படுகிறது..!
ஒருவேளை நிலோபர் திமுகவில் வந்தால், இஸ்லாமிய சமுதாய ஆதரவு திமுகவுக்கு மேலும் பெருகும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடி புகார்கள் இருக்கின்றன, எடப்பாடி மீதும் ஊழல் புகார் இருக்கின்றன என்று நிலோபர் பேசிய விஷயம் இங்கு இருந்தால் இனி பருப்பு வேகாது எனவே அடுத்த பக்கம் தாவலாம் என்பதாகவே கருதப்படுகிறது..



