பத்ம சேஷாத்ரி பள்ளி மீது பாலியல் புகார்.. காவல்துறை நேரில் சென்றும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.. முழு பின்னணி என்ன...?
பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போலீசார் நடத்தும் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து தோண்ட தோண்ட பல பாலியல் புகார்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டு வருகின்றன
தற்போது அங்கு படிக்கும் மாணவிகள், முன்னாள் மாணவிகள் பலர், பள்ளியில் தாங்கள் எதிர்நோக்கிய பாலியல் ரீதியான, ஜாதி ரீதியான பிரச்சனைகளை இணையத்தில் அடுக்கி வருகிறார்கள். அதிலும் பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு அங்கு ஆசிரியராக இருக்கும் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொல்லை
ஆன்லைன் கிளாஸ் நடக்கும் போது அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளின் வாட்ஸ் ஆப்பில், படம் பார்க்க வரியா என்பது தொடங்கி பாலியல் ரீதியாக பல மெசேஜ்களை அனுப்புவது, மாணவிகளை வகுப்பு நடக்கும் போது தவறாக தொடுவது என்று அங்கு பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடுமையான பல புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
விசாரணை
இணையத்தை இந்த புகார்கள் உலுக்கி உள்ள நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை புகார் அளித்துள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளிக்குள் விசாரணை நடத்த சென்ற போது பள்ளி நிர்வாகம் போலீசாரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
போலீஸ் வாகனத்தை உள்ளே விடாமல் கேட்டை மூடி வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணை எதற்கும் பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்பு போலீஸ் தீவிரமாக கோரிக்கை வைத்த பின்பே போலீசார் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் இதில் தலையிட்ட பின்பே பத்ம சேஷாத்ரி பள்ளி வழிக்கு வந்துள்ளது. இதன் பின்பே பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆனால் இன்னுமும் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடராக தற்போது பள்ளி முதல்வர் இந்திரா மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார். என்ன நடந்தது என்பது குறித்து தனி தனியாக விளக்கம் அளிக்கும்படி கூறியுள்ளார்.
இந்த விசாரணைக்கு அந்த பள்ளி முதல்கட்ட ஒத்துழைப்பை சரியாக வழங்காத நிலையில் கல்வித்துறை சார்பாக பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க தனியாக குழு அமைத்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விவகாரத்தை தனியாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

