தமிழகத்தில் +2 பொது தேர்வு கட்டாயம் – கல்வி அமைச்சர்களின் விளக்கம்!!

தமிழகத்தில் +2 பொது தேர்வு கட்டாயம் – கல்வி அமைச்சர்களின் விளக்கம்!!



மத்திய கல்வி அமைச்சர் அவர்களுடன் இன்று நடந்த அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழக கல்வித்துறை அமைச்சர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடந்து குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக உயர்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருவரும் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளனர்.

அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை எப்போது, எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறியுள்ளார். தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், தேர்வு நடத்தும் முறைகள் குறித்து மத்திய அரசு வழங்கிய வழிகளை பற்றி தமிழக முதல்வரிடம் ஆலோசித்து தகுந்த பதில்களை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மாநிலத்தை சேர்ந்த கல்வி அமைச்சர்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தவே விரும்புவதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பின்னர் தேர்வுகளை நடத்துவது பற்றிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான இறுதி முடிவை வரும் செவ்வாய்கிழமைக்குள் தெரிவிக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் தேர்வு பற்றிய விவாதங்களும் நடந்துள்ளது. தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்துவதற்கு மாநில அளவிலான தேர்வுகளை மட்டுமே தமிழகத்தில் நடத்துவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அனுமதி கேட்டுள்ளார். மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வுகளை நடத்திக் கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.