திமுக ஆட்சிக்கு வந்தால் சமூக விரோதிகள் அதிகரிப்பர் கோவையில் பிரதமர் மோடி பேச்சு.....

திமுக ஆட்சிக்கு வந்தால் சமூக விரோதிகள் அதிகரிப்பர் கோவையில் பிரதமர் மோடி பேச்சு......

கோவை கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி தனது 15 நிமிட பேச்சால் எதிர்க்கட்சியான திமுகவை விழிபிதுங்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மோடியின் கோவை வருகைக்கு இருந்த செல்வாக்கை வைத்து தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கக் கூடும் என்றே தெரிகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மே 3 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுவதால் தேர்தலை மே 3க்குள் வைத்துவிட்டது தேர்தல் ஆணையம்.

இதையொட்டி தமிழகத்திற்கு தேசிய தலைவர்கள் வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 25 ஆம் தேதி பிரதமர் நரேந்தி மோடி கோவைக்கு வந்திருந்தார்.

கோஷங்கள்

அப்போது பல்லாயிரக்கணக்கான கூட்டம் கூடியது. பிரதமர் விழா மேடைக்கு வந்ததும் அவரை வாழ்த்தி முழங்கிய கோஷங்கள் விண்ணை பிளந்தன. கோவைக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சென்றிருந்தாலும் மோடிக்கு கிடைக்க வரவேற்பை கண்டதில்லை என்றே விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பு

அது போல் இந்த முறை பொதுக் கூட்ட மேடையில் 15 நிமிடங்கள் பேசி பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் சமூக விரோதிகள் அதிகரிப்பர். இவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.

மகிழ்ச்சியில் பாஜக

இவர்கள் ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த கொடுமை நினைவிருக்கிறதா? என கேட்டு எதிர்க்கட்சிகளின் கண்களில் வேலை விட்டு ஆட்டியுள்ளார் மோடி. இவரது பேச்சின் தாக்கத்தை உணர்ந்த தமிழக பாஜகவினர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். இதே போல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு பேச்சை மோடி பேசினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என பாஜகவினர் கருதுகிறார்களாம்.

கனவில் மிதக்கும் பாஜக!

மோடிக்கு கோவையில் கிடைத்த வரவேற்பை காரணம் காட்டி அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறலாம். விருப்பமான தொகுதிகளையும் கேட்கலாம் என்ற மிதப்பில் இருக்கிறார்களாம் தமிழக பாஜகவினர்.