"இதோ, 'ஒருத்தர்' பெங்களூரிலிருந்து கிளம்பிட்டார்.. இனி தானா நடக்கும்".. ஸ்டாலின் போட்ட போடு!

 "இதோ, 'ஒருத்தர்' பெங்களூரிலிருந்து கிளம்பிட்டார்.. இனி தானா நடக்கும்".. ஸ்டாலின் போட்ட போடு! 



 "பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும்" என்று ஓபனாகவே போட்டுடைத்து கருத்து தெரிவித்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின். 

சசிகலா அரசியலுக்குள் ரீ என்ட்ரி ஆனால், தென் மண்டலத்தின் செல்வாக்கும் எடப்பாடியாருக்கு சரிந்துவிடும் என்றும், அதேபோல, தென்மாவட்டங்களில் அமமுகவே தலைதூக்கும் என்றும் கணக்கு போடப்பட்டு வருகிறது. 

அதாவது சமுதாய வாக்குகள் பெரும்பாலும் தினகரன், சசிகலாவுக்கு வந்து சேரும்.. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கும்.. இது திமுகவுக்கு பெரிய பிளஸ்ஆக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.



 இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினும், சசிகலாவின் வருகையை பற்றி அடிக்கடி கருத்து தெரிவித்தபடி உள்ளார்.. "சசிகலா வெளியே வந்தால் இந்த ஆட்சி 4 மாதம் கூட இருக்குமா என்பது சந்தேகம் தான்" என்று கடந்த மாதம் ஒரு கூட்டத்தில் பேசும்போது ஸ்டாலின் கூறியிருந்தார். அதுபோலவே, 2 நாளைக்கு முன்புகூட, தென்மாவட்ட எம்எல்ஏ ஒருவர் முக ஸ்டாலினிடம், "அதிமுக ஆட்சி மேல் மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறது, இப்படியே 3 மாசம் நீடித்தால், நமக்குதான் எல்லா தொகுதியிலும் வெற்றி" என்றாராம்..

அதற்கு ஸ்டாலின், "எல்லாத்தையும் சசிகலா பார்த்துப்பாங்க... அவங்களால் அதிமுக வாக்குகளும் பிரிய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்த கட்சியில் குழப்பம் இருக்கிறதால, இனி அது மேலும் அதிகமாகலாம்.. இவ்வளவு காலம் ஸ்டாலின் Vs எடப்பாடின்னு பிரச்சாரம் இருந்தது.. இனி சசிகலா Vs எடப்பாடின்னு மாறிடும்" என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில்தான், சசிகலா ஒரு வார ரெஸ்ட்டுக்கு பிறகு சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.. இதனால் காலையில் இருந்தே தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பு தொற்றி கொண்டிருக்கிறது.. இது சம்பந்தமாக திமுக தலைவர் மறுபடியும் கருத்து தெரிவித்துள்ளார்..

திமுக பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, "பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும்.. முன்பு, 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என சொல்லியிருந்தேன். இப்பவும் சொல்கிறேன் 234 தொகுதியிலும் திமுக வெல்லும்" என்றார். அதெல்லாம் சரி...ஸ்டாலின் என்ன சொல்ல வருகிறார்? யாரை சொல்கிறார்? அப்படி என்ன நடக்க வேண்டியது உள்ளது? பார்ப்போம்..!