எம்.ஜி.ஆருக்கும் காவித்துண்டு...! என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?

எம்.ஜி.ஆருக்கும் காவித்துண்டு...! என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?




புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக, மரியாதைக்குரிய பெரியவர்களை காவிமயமாக்கும் கலாசாரம் தொடர்ந்து வருகிறது. பாரதியார், திருவள்ளுவர் என இலக்கியப் பெருந்தலைகளை இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கும் விதமாக அவர்கள் காவிமயப்படுத்தப்பட்ட விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக இருந்தது.
 

இதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு பெரியாரை அவமதிக்கும் நோக்கில் பெரியார் சிலை மீது காவி சாயம் அடிக்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர் மீது காவித்துண்டு போர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்மநபர்கள் காவித்துண்டு போர்த்தியுள்ளனர். தகவல் அறிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர்.சிலை முன் குவிந்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

இதை தமிழக துணை முதல்வரும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் வன்மையாக கண்டித்துள்ளாா். இந்த ஈனச்செயலை செய்த கயவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மர்ம ஆசாமிகள் யாரோ செய்த வேலை என்று இதுவரை தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இதற்குக் காரணமாணவர்களை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நடந்த செய்தியாளா் சந்திப்பில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தொடா்பான கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சா் டி. ஜெயக்குமாா் அளித்த பதிலில் ஆடிப்போன, தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் விஷமிகள் தான் இந்த வேலையை செய்திருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.


இதற்கு முன்பு நாமக்கல்லில், எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணா ஆகிய இருவர் சிலைக்கும் காவித்துண்டு போர்த்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 

எல்லாமே அரசியல் தான்...!