மன்னர் குடும்பத்திடம் பத்மநாபசுவாமி கோயில்... உச்சநீதிமன்றம் அதிரடி தீா்ப்பு....!
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு செல்கிறது. கோயிலில் பூஜை செய்ய தந்திரியை மன்னர் குடும்பமே நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கருதப்படுகிறது. இங்கு இருக்கும் பெருமாள், பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தண்ட வர்மா மகாராஜாவால் 260 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டது. அவர் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தக் கோயிலை திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வந்தனர். பத்மநாபசுவாமி கோவில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு ஆகம விதிமுறைகளின்படி இந்தக் கோயிலின் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி சிறியதும், பெரியதுமாக 9 கோட்டைகள் உள்ளன.
இந்த நிலையில், பத்மநாபசுவாமி கோயிலுக்குள் இருக்கும் சுரங்க அறைகளில் ஏராளமான தங்க, வைர நகைகள் இருப்பதாகவும், அவற்றை கண்டறிய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டி.பி.சுந்தரராஜன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, பாதாள அறைகளை திறந்து சோதனை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பணிக்காக 7 பேர் குழுவையும் அமைத்தது. நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட 2 பேரை பார்வையாளர்களாக நியமித்தது. கோயிலின் ரகசிய அறைகள் ஏ முதல் எப் வரை பிரிக்கப்பட்டன. கோயிலின் 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. இதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.
கோயிலில் இருக்கும் பி அறை கடந்த 100 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை என்றும், இந்த அறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இதுவரை 'பி' அறை மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. சிறப்பு வழக்கறிஞரான கோபால் சுப்பிரமணியம் பி அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்ஜே.எஸ்.கேஹர், சந்திராசூட் கோவில் நிர்வாகத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்க முடியாது. எனவே, 'பி' அறையை திறந்து அதிலுள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே, கோயிலில் 186 கோடி மதிப்புள்ள 769 தங்க கலசங்கள் திருடப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு வழக்கறிஞராக கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இவர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் கோயிலில் இருந்து பொக்கிஷங்கள் திருட்டு போயிருப்பதாக தெரிவித்து இருந்ததாக செய்தி வெளியானது. மேலும், இதுகுறித்து, வினோத்ராய் தலைமையிலான கமிட்டியும் அறிக்கை ஒன்று தாக்கல் செய்து இருந்தது. அதில், 186 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 769 தங்க பானைகள் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், தங்கம் சுத்திகரிப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால், ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ரூ.14 லட்சம் மதிப்பிலான வெள்ளி பார் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ''திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு செல்கிறது. கோயிலில் பூஜை செய்ய தந்திரியை மன்னர் குடும்பமே நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க வேண்டும். கடைசி மன்னர் 1991ல் இறந்துவிட்டார் என்பதற்காக கோயிலின் சொத்துக்களை மாநில அரசிடம் ஒப்படைக்க முடியாது. நிர்வாகக் கமிட்டிக்கு திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். தினமும் கோயிலில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இந்தக் கமிட்டியில் அனைவரும் இந்துக்களே இடம் பெற்று இருக்க வேண்டும். மாநிலத்தின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு இந்தக் கமிட்டி செயல்பட வேண்டும். கோயிலில் இருக்கும் 'பி' அறையை திறப்பது குறித்து இந்தக் கமிட்டியே முடிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.