"கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" -மு.க. ஸ்டாலின்

"கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" -மு.க. ஸ்டாலின்



தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் சில முக்கிய கேள்விகளை முதலமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில் மக்களுக்கும் தெரிந்தாக வேண்டும்.


1. கொரோனா நோய்த் தடுப்பில் அரசு சிறப்பாக பணியாற்றுகிறது என்றும் சமூகப் பரவல் இல்லை என்றும் சொல்வது உண்மையென்றால், ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப் படிகள் போல் அதிகரித்து வருகிறது?


2. கோவிட்-19ஐ அறவே ஒழிக்கிறோம் என்ற பெயரில் பொய்ப் பேட்டிகளை நிறுத்தி விட்டு மேல் நோக்கி உயர்ந்து கொண்டே போகும் கொரோனா நோய்த்தொற்று வரைபடத்தை தட்டையாக்குவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?


3. ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டி நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையிலும் எந்தக் கமிட்டியின் அறிக்கையும் பொதுவெளியில் இல்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?


4. இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்பந்தப்பட்டவர்கள் ஆகியோருடன் கலந்துபேச ஏன் அரசு தொடக்கத்தில் இருந்து மறுத்து வருகிறது?



இது அரசியல் கேள்விகள் அல்ல. அரசியலுக்கான கேள்விகளும் அல்ல. மக்களின் உயிர் சம்பந்தமான கேள்விகள். இதற்கு நேர்மையான பதிலை தமிழக அரசு தரவேண்டும். உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.5. பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்திவிட்டு கொரோனா பேரிடரின் விளைவாக, நிதி நிலை அறிக்கையில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மாற்றி அமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எப்போது அரசு ஆர்வம் காட்டப் போகிறது?


இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி, அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் - நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சி முகட்டை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர் கொடுத்துள்ள எச்சரிக்கையை, தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.


கொரோனாவில் உயிர் இழந்த ஏழை எளியோர் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தப் பேரிடர் காலத்தில், அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு இடையே நடக்கும், 'குழு மனப்பான்மை' அடிப்படையிலான, தன் முனைப்புச் சண்டை (Ego War) முடிவுக்கு வர வேண்டும். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பதவிப் போட்டி, தவிர்க்கப்பட வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு, சிறப்புத் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.


அதோடு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை, எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, கூட்டல் கழித்தல் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள், மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைக்க வேண்டும்.


இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.