தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி



தேனி, ஜூன் 21:  தேனி மாவட்டத்தில் 2 மருத்துவர்கள், சிறைக் கைதி உள்ளிட்ட 28 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தேனியில் ஏற்கனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவரின் மனைவியான 36 வயதுடைய பெண் மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியிலிருந்த 22 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


தேனி, பொம்மைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை துப்புரவு தொழிலாளிகளான முறைய 55 மற்றும் 60 வயதுடைய கணவன், மனைவி, தேனியைச் சேர்ந்த 35 வயதுடைய உளவுத் துறை காவலர், பழனிசெட்டிபட்டி அரசு நகரைச் சேர்ந்த 42 வயதுடைய மதுரை சிபிசிஐடி பிரிவு தலைமைக் காவலர், சென்னையிலிருந்து பூதிப்புரத்திற்கு வந்த 3 சிறுமிகள் என 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



பெரியகுளம், வடகரையைச் சேர்ந்த சென்னையிலிருந்து வந்த 34 வயதுடைய பெண், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண்,  தென்கரை மூன்றாந்தல் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன், இடுக்கடிலாட் தெருவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கம்பம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த  40 வயதுடைய பெண், தாத்தப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக தொழில்நுட்புனர்,  அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 57 வயதுடைய மருந்துக் கடை உரிமையாளர், சென்னையிலிருந்து வந்த பாரதியார் நகரைச் சேர்ந்த முறையே 36 மற்றும் 30 வயதுடைய கணவன், மனைவி என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


போடி, வரதராஜன் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  33 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள்,  பேட்டைத் தெருவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர், குலசேகரபாண்டியன் தெருவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்,  குச்சனூரைச் சேர்ந்த 40 வயதுடைய பண்ணைப்புரம் வருவாய் ஆய்வாளர், சின்னமனூர் பழனியாண்டி தெருவைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனி, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய கைதி என 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை தனியார் மருத்துவமனை, பெரியகுளம் மற்றும் கம்பம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது.


தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி