தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. எங்கெல்லாம், என்ன சலுகை? மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. எங்கெல்லாம், என்ன சலுகை? மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர்





தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.


நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், நேற்று, மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.


அதில், எந்தெந்த பகுதிகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கலாம், எப்படி தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு நடைமுறையை இன்னும் சில காலம் கடைபிடிக்கலாம் என்று மருத்துவர் குழு பரிந்துரைத்த நிலையில், நாளை மறுதினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.


அப்போது, அந்தந்த மாவட்டங்களின் நிலவரம் குறித்து கேட்டறிவார். 5-வது கட்ட ஊரடங்கு காலத்தின் போது எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படும் என்பது இதில் முடிவெடுக்கப்படும். ஏனெனில் 5-வது கட்ட ஊரடங்கு காலத்தில் மாநில அரசு பெரும்பாலான முக்கிய முடிவுகளை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


எனவே, கலெக்டர் கொடுக்கக்கூடிய தகவல்கள், அதிலிருந்து மாநில அரசு எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.