சீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..!
இன்று உலகமே கொரோனாவின் தாக்கத்தினால் அரண்டு போயுள்ளது எனலாம். அப்படி இருக்கையில் இதற்கெல்லாம் சீனா தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் பல நாடுகள் மனதில் எழுந்துள்ளது. அதிலும் கொரோனாவின் தாக்கத்தினை அடுத்து, சீனாவின் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் கூறப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் மக்களை எல்லாம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது எனலாம்.
இதற்கிடையில் பல முன்னேறிய நாடுகளும், சீனாவில் இருந்து தங்கள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களை வெளியேற்றலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் சீனாவுக்கு சாத்தியமான மாற்றங்களில் ஒன்று இந்தியா. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஏனெனில் இங்கு உழைக்கும் வயதுடைய மக்கள் அதிகம். அதிக எண்ணிக்கையிலான திறமையான மற்றும் ஆங்கிலம் பேசும் மனித சக்தி மற்றும் இன்னும் பல சாதகமான காரணிகள் உள்ளன.
உலகின் தற்போதைய மாறி வரும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு இடையே, நிறுவனங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில் கோட்டக் மகேந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் கோட்டக், சீனா உலகின் தொழில் சாலையாக இருந்தால், இந்தியா அதன் அலுவலகமாக இருக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வெளி நாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளத்தை சீனாவிலிருந்து, இந்தியாவிற்கும் மற்ற பகுதிகளுக்கும் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளன.
சமீபத்திய அறிக்கையின் படி, மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ சாதனங்கள், ஜவுளி மற்றும் செயற்கை துணி போன்ற துறைகளைச் சேர்ந்த இந்த நிறுவனங்களில் சுமார் 300 இந்தியாவில் தங்களது உற்பத்தியினை தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தற்போது சீனாவினைத் தான் நம்பியுள்ளன.
எனினும் இந்தியாவிற்கும் மற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான உற்பத்தி செலவு சுமார் 10 -12 சதவிகிதமாகும். எனினும் இந்தியாவின் உற்பத்தி செலவு சீனாவுடன் ஒத்து போவதாகவும் கூறுகின்றது. மேலும் இந்தியாவும் பெரிய அளவிலான சந்தையினை கொண்டுள்ளதால், இது பெரிய அளவிலான உற்பத்தியாளர்களை ஈர்க்கிறது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இன்னும் பல இருப்பதால், நிச்சயம் இந்திய சந்தைகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இருக்கும் என்பதும் உண்மையே.