இரட்டை நாக்கு ராகுல் காந்திக்கு ஜவடேகா் பதிலடி
கொரோனா தொற்று வெகு வேகமாகப் பரவிவரும்போது ஊரடங்கை தளர்த்திய ஒரே நாடு இந்தியாதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
அத்துடன், தொற்று பரவுவது மே மாத இறுதியில் குறைந்துவிடும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக தற்போது தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இணைய தளம் மூலமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்திய ராகுல் காந்தி, தேசிய அளவிலான ஊரடங்கு, (அல்லது முடக்க நிலை) தோல்வியடைந்துவிட்டதாக கூறிய ராகுல்காந்தி, நான்கு கட்ட முடக்க நிலையால் பிரதமர் குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.
"முடக்கநிலை அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் மட்டுமே ஆனது. ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகின்றன. இதுவே இந்த முடக்கநிலையின் வெற்றி," என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. தற்போது முடக்கநிலையைத் தளர்த்தும்போது அதையும் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இரட்டை நாக்கில் பேசுகிறது, என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாராட்டும்போது, காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கொரோனா வைரஸ் ஊரடங்கு குறித்து வேறு என்ன சொன்னார்?
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்களுக்கு நிவாரணத் தொகை தரப்படுகிறது, உணவு அளிக்கப்படுகிறது, கொரோனா சிக்கலை சமாளிப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒரு திட்டம் உள்ளது. ஆனால், மத்திய அரசின் உதவியில்லாமல் அவர்கள் தனித்துப் போராட முடியாது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி இந்த மாநில முதல்வர்களுடன் தாம் உரையாடியதாகவும், அவர்கள் தாங்கள் தனித்துப் போராடுவதாக குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோதி என்ன செய்திருக்கவேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது என்ன செய்திருக்கவேண்டும், என்ன தவறிவிட்டார்கள் என்பவற்றை தாம் இப்போது பேச விரும்பவில்லை என்றும், இப்போது என்ன செய்யவேண்டும் என்பது குறித்தே பேசுவதாகவும் ராகுல் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியில் ட்வீட் செய்திருந்த ராகுல் காந்தி, "இரண்டு மாதம் முன்பு ஊரடங்கை அறிவித்தபோது 21 நாளில் நாம் கொரோனா வைரசுக்கு எதிராக வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தார். இப்போது 60 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் வைரஸ் தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் வைரஸை அடக்க முடியவில்லை. அடுத்து என்ன என்பதே என் கேள்வி" என்று கேட்டிருந்தார் ராகுல்.
எப்படி இந்த தொற்றை கட்டுப்படுத்தப் போகிறீர்கள், முடக்க நிலையை அகற்றுவது பற்றிய உங்கள் திட்டமென்ன?
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, மாநில அரசுகளுக்கு, சிறு குறு தொழில்களுக்கு எப்படி உதவி செய்யப் போகிறீர்கள், என்றும் ராகுல்காந்தி கேட்டார்.
சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், நம் சிறு குறு தொழில்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறிய ராகுல் காந்தி அவர்களுக்கு நிதியுதவி செய்து காப்பாற்றவேண்டும். 50 சதவீதம் பேருக்கு மேலாக இருக்கிற ஏழைகளுக்கு பண உதவி தேவை என்றும் அவர் தெரிவித்தார்.