இதுதான் 'பெரியார் மண்ணோ'?!?!
தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தி... அது ஏன் இப்படிக் கேவலமாகப் போய்க் கொண்டு இருக்கிறது?
பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து இருக்கை இளைஞனிடம் பேச்சுக் கொடுத்தேன் - GST வரிவிதிப்பு பற்றிப் பேச்சு வந்தது! ஒரு கல்லூரி இளைஞன் GST பற்றிப் பேசுவதே பெரிய விஷயம் அல்லவா?
"மோடி நாசம் பண்ணிட்டாருங்க - இலவசமா மருத்துவம் இருக்கற சிங்கப்பூர்ல GST கிடையாது - நம்ம ஊர்ல 28 சதம்!"- என்று அவன் சொன்னதும்...
இது 'எங்கேயோ கேட்ட குரல்' மாதிரி உள்ளதே என்ற ஐயத்தில் "இதை யார் சொன்னாங்க?"- எனக் கேட்டேன்.
"விஜய் 'மெர்சல்' படத்துல சொல்லிருக்காருங்க"- என்றான்.
அவனுக்கு 'சிங்கப்பூர் மற்றும் மேலை ஐரோப்பிய நாடுகளில் PUBLIC HEALTH INSURANCE என்று ஒன்று உள்ளதே தெரியுமா?'- எனக் கேட்டேன்.
"அப்படின்னா என்ன சார்?"- என்றான்.
"தம்பி உன் சம்பளத்துல இருந்து குறிப்பிட்ட தொகை ப்ரீமியம் மாதிரி பொது ஹெல்த் இன்சூரன்சுக்குப் பிடித்துக் கொள்வார்கள் - சுய வருமானம் உள்ளவர்கள் (கன்சல்டன்ட்ஸ்/ வக்கீல்/ ஆடிட்டர் etc) - அவர்கள் காட்டும் ஆண்டு வருமானத்தை ஒட்டி இன்சூரன்ஸ் தொகை செலுத்தியே ஆக வேண்டும்; இதில் தன் வருமானத்தைக் குறைத்து எல்லாம் எவனும் காட்ட முடியாது. ALL PAYMENTS/ FEES ARE DIGITAL!"
"எனவே அங்கே எல்லாம் சம்பாதிப்பவர்கள் எல்லாரும் PUBLIC HEALTH INSURANCE கீழ் வந்தாக வேண்டும். எனவே எல்லாரும் செலுத்தும் பிரீமியம் ஒரு பெருந் தொகையாக (CORPUS) சேரும் - எல்லாருமேவா உடல் நலம் சரியில்லாமல் படுக்கப் போகிறான்? சேரும் பிரீமியத்தின் பிரம்மாண்டத்தோடு ஒப்பீட்டால், ஆஸ்பத்திரியில் படுத்து சிகிச்சை பெறுபவனின் ஃபீஸ் சுண்டைக்காய்! அதனால் அவன் தன் CITIZEN ID (நம்ம ஊர் ஆதார் மாதிரி) கார்டை ஆஸ்பத்திரியில் காட்டினாலே போதும் - அவனுடைய முழு ஜாதகமும் கம்ப்யூட்டரில் வந்து விடும்"
"ஏன் சார் அப்ப அந்தரங்க உரிமை பாதிக்கப்படாதா சார்? அவனைப் பத்தின விவரம் எல்லாம் கம்ப்யூட்டர்ல இருந்தா? அதனாலதான் சார் 'ஆதார்' திட்டத்தையே சிலர் எதிர்க்கறாங்க"
"யாரு?"
"போன மாசம் கூட ஒரு மனித உரிமை அமைப்பு நோட்டீஸ் கொடுத்தாங்க சார்!"
இப்படித்தான் தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தி கூர் மழுங்கி உள்ளது!
'வயித்துக்கு சோறு இல்லாத போது எதுக்கு சார் சாட்டிலைட்டு?'
'இதை யார்யா சொன்னது?'
'நடிகர் சிவக்குமார், கம்ப ராமாயணம் முழுக்க மனப்பாடமா ஒப்பிக்கிறார் சார் - அவரே சொன்னார் சார்'
'சரி, தம்பீ இப்ப கொஞ்சநாள் முன்னாடி ஒரு பெரிய புயல் ஒரிசாவைத் தாக்கிச்சு இல்ல?'
'அப்படியா சார்?!'
'ஏம்பா பேப்பர்ல என்னதான் படிப்பே? அந்தப் புயலை நிமிஷத்துக்கு நிமிஷம் சாட்டிலைட் மூலமா ஃபாலோ பண்ணினதாலதானே சேதாரத்தைக் குறைக்க முடிஞ்சது'
'சாரி சார் நான் படிக்கலை - சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல விஷால் க்ரூப்பு, ஏதோ பாண்டவர் க்ரூப்புனு எல்லாம் பரபரப்பா போட்டாங்களா அதுல கவனமா இருந்துட்டேன்!'
சத்தியமாக மயில்சாமி அண்ணாதுரைக்கும், நடிகர் மயில்சாமிக்கும் இவனுக்கு வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை!
இவனுக்கு ஹைட்ரோ கார்பன் துரப்பணம் குறித்து பெரியார் பல்கலைக் கழக நிலவியல் (GEOLOGY) பேராசிரியர் கொடுத்த 'தந்தி டிவி'- பாண்டே நேர்காணல் தெரியாது!
'சார் நீர் ஆதாரம், விவசாயம் எல்லாம் பூடும் சார்!'
'யாருய்யா சொல்றாங்க?'
'முத்தரசன் சொல்றாரு, நல்லகண்ணு சொல்றாரு, உதயகுமார் சொல்றாரு!'
உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டரிடம் போகாமல், பேயோட்டுபவனிடம் செல்பவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்?
இளைஞர்கள் என்றில்லை - பொதுத்துறை, அரசுத் துறை இவற்றில் பணிபுரிபவர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரிகள், கைவண்டி இழுப்பவர்கள்.... இப்படிப் பலரும், பலரும், பலரும் வெறும் பிரசார வசீகரத்துக்கு மயங்கிப் போவது ஏன்?
இத்தனைக்கும் இன்று கணினியில் க்ளிக் செய்தால் எல்லா விஷயங்களையும் குறித்த, ஆதார பூர்வமான தகவல்களும், வெவ்வேறு இணைய தளங்களில் அந்தந்தத் துறை சார்ந்த ஜாம்பவான்களின் பதிவுகளும் கொட்டிக் கிடக்கும் போது...
தமிழ் சமூகப் பொதுப்புத்தி தனது சந்தேகங்களுக்கு விடையை ஏன் சிவகுமாரிடமும், மயில்சாமியிடமும், உதயகுமார் வகையறாக்களிடமும் தேடுகிறது?
அப்துல் கலாம் அவர்கள் நவம்பர் 6 ஆம் தேதி 2011 - THE HINDU இதழில் அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது எவ்வளவு பாதுகாப்பானது? அதே நேரம் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி சுரங்கம் அமைத்தால் அதன் வெப்பம் பூமியை எப்படி மலடாக்கும்? (Coal fields and burning earth)... இதையெல்லாம் ஒரு குழந்தைக்குப் புரிய வைப்பது மாதிரி எழுதி உள்ளாரே?
அந்த அற்புத மனிதன் அப்துல் கலாம் - அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதன் அனுகூலங்களை இப்படி எழுதி இருப்பதாவது பலருக்குத் தெரியுமா?
நமக்கு அணுசக்தி முதல் சாட்டிலைட், ஹைட்ரோ கார்பன் வரை...
அப்துல் கலாமோ, மயில்சாமி அண்ணாதுரையோ, பல்கலைக் கழகப் பேராசிரியரோ பொருட்டே அல்ல!
ஒரு நடிகன் திரையரங்க இருட்டில் ஒளி வீசும் வெண்திரையில் விரலை ஆட்டிச் சொல்வதே வேதவாக்கு!
யாரோ ஒரு போராளி - தோளில் ஜோல்னா பை - குறுந்தாடி - டி சர்ட்டில் ஈவேரா படம், அல்லது சே குவேரா படம் அணிந்து 'அறிவு ஜீவி' தோற்றம் காட்டிவிட்டால் GST முதல், NEET தேர்வு, மீத்தேன் எல்லாவற்றுக்கும் அவன்தான் சர்வ ஞாநி!
ஒரு பாலம் கட்டினால், சாலையை அகலப்படுத்தினால் என்னென்ன நன்மை என்பதை ஒரு எஞ்ஜினீயர் சொல்வதை ஏற்க மாட்டோம்!
ஏதோ ஒரு டிவி சானலில் 'நெறியாளர்' சொல்வதை அப்படியே ஏற்போம்!
தமிழ் சமூகப் பொதுப் புத்திக்கு 'பொறியாளரை' விட 'நெறியாளர்' முக்கியம்!
"நீ இந்தப் பிரச்னையைப் பற்றி இவ்வளவு ஆவேசமாகப் பேசித் தூண்டி விடுகிறாயே - உனக்கு இந்த விவகாரத்தில் சகல விஷயங்களும் தெரியுமா?"- என்று எவனையாவது கேட்கிறோமா?
ராஜராஜ சோழனைப் பற்றி குடவாசல் பாலசுப்ரமணியம் (இவர் தஞ்சைப் பெரிய கோயில் ஆராய்ச்சியிலேயே தன் உயிர், மூச்சு எல்லாவற்றையும் வைத்திருப்பவர்),
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி, சோழர் காலச் சரித்திர ஆய்வில் புகழ் பெற்ற டாக்டர் ந சஞ்ஜீவி,
சிலப்பதிகாரத்தை சேர - சோழ - பாண்டிய மூவேந்தர்களின் பின்னணியோடு ஆய்வு செய்த வ.அய்.சுப்ரமணியம்,
மற்றும் K A நீலகண்ட சாஸ்திரி,
சோழர் பெரும் வரலாற்றை அங்குலம் அங்குலமாக ஆய்ந்து "பொன்னியின் செல்வன்" படைத்த அமரர் கல்கி...
இப்படி எவர்பற்றியும் கவலை கொள்ளாமல்...
ஒரு சினிமா டைரக்டர் ஆவேசமாக ராஜராஜனைப் பழித்தால் உணர்ச்சி வசப்பட்டுக் கை தட்டும் கூட்டமாகத் தமிழ்ப் பொதுப் புத்தி மாறியது ஏன்? அப்படிக் கை தட்ட நம்மை உந்துவது எது?
ரயிலுக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, அது வரத் தாமதமானால், ஸ்டேஷன் மாஸ்டரிடம் காரணம் கேட்காமல், மணி அடிப்பவனிடம் கோபப்படுகிறோமே, அது போலவோ இது?
எவரிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனை கூட இல்லாமல் மழுங்கியது ஏன்?
நீண்ட நாள் முன்பே சினிமா மயக்கம் இருந்தது உண்மை - திரைப்படம் என்ற கலைச் சாதனத்தின் வீச்சை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது உண்மை! ஆனால் அவை எல்லாம் தமக்குப் பிடித்த நடிகர் - அவர் சார்ந்த அரசியல் என்ற எல்லையோடு நின்று போனது!
அது கூட சிவாஜி கணேசனுக்கு வாய்க்கவில்லை - அவரது ரசிகர்கள் பலதரப் பட்டவர்கள் - அவரை மிகச் சிறந்த நடிகராக ரசித்த பலரும் அவருடைய அரசியல் நிலைப்பாடுகளை ஏற்றதில்லை - எனவே பல்வேறு கட்சி அபிமானிகளிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு!
ஆனால் இன்று? அரசியல் மட்டுமில்லை, விஞ்ஞானம் பொருளாதாரம், கல்வி, சரித்திரம், நிலவியல்.. இப்படி எல்லாவற்றிலும்....
அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களையும், அறிஞர்களையும் ஒதுக்கிவிட்டு...
சினிமாக்காரனையும், சில்லறை கோஷக்காரர்களையும் நம்பும் அளவு தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தி ஏன் மழுங்கிப் போனது?
ஒருவேளை இதுதான் 'பெரியார் மண்ணோ'?!?!