15,000 பேருக்கு வேலை... கொரோனா சமயத்தில் ஆறுதல்!
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடாருக்குச் சொந்தமான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான HCL டெக்னாலஜீஸ், நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, ஜனவரி - மார்ச் காலாண்டில் 24.3 சதவீத உயர்வுடன் ரூ.3,154 கோடி லாபம் ஈட்டியுள்ளது ஹெச்.சி.எல். நிறுவனம். 2019ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 2,568 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருந்தது.
வருவாயைப் பொறுத்தவரையில், 2019 ஜனவரி - மார்ச் மாதங்களில் ரூ.15,990 கோடியாக இருந்த மொத்த வருவாய், இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் மாதங்களில் ரூ.18,590 கோடியாக அதிகரித்துள்ளது. இது 16.3 சதவீத வளர்ச்சியாகும். இக்காலாண்டில் வருவாய் மற்றும் நிகர லாபம் அதிகரித்திருந்தாலும், நடப்பு காலாண்டிலும் அடுத்து வரும் மாதங்களிலும் கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்கும் என்று ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்திடம் ஆர்டர் பெறுவது போன்ற செயல்பாடுகள் ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் மந்தமாகவே இருக்கும் என்பதால் தொழில் வளர்ச்சியும், வருவாய் ஈட்டுவதும் சவாலான ஒன்றுதான் என்று ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.